About us > பாடத்திட்டக் குழுவின் முன்னுரை

பாடத்திட்டக் குழுவின் முன்னுரை

வெற்றிச்செல்வி இராசமாணிக்கம்
லதா சந்த்ரமோஹன்
வித்யா நாராயணன்
நலாயினி குனநாயகம்

தமிழை 'இரண்டாம்' மொழியாக இந்தியாவில் கற்பதற்கும் அமெரிக்காவில்  கற்பதற்கும் நிறைய வேறுபாடுகள் உள்ளன. சூழ்நிலையே இதற்கு முதல் காரணம். இந்தியாவில் தமிழ் மொழி, பெரும்பாலும் பள்ளிக்கூடத்திலேயே ஒரு பாடமாக வழங்கப்படுகிறது. சில பள்ளிகளில் வாரத்தில் இரண்டு முதல் மூன்று மணி நேரங்களும், மற்ற பள்ளிகளில் அன்றாடம் ஒரு மணி நேரமும் தமிழ் மொழிக்காக ஒதுக்கப்படுகின்றது. இதனால் மாணவ மாணவியர் தமிழை அன்றாடம் படிக்கவும் எழுதவும் ஒரு கட்டாயம் ஏற்படுகிறது. அதைத்தவிர வீட்டில், தொலைக்காட்சியில், சாலைகளில், வெளியிடங்களில் என்று பல்வேறு இடங்களிலும் இவர்கள் தமிழ் மொழியைக் கேட்க மற்றும் பேச வாய்ப்பு கிடைக்கிறது. இவற்றிற்கெல்லாம் முற்றும் மாறுபாடான சூழ்நிலையே அமெரிக்காவில் நிலவுவதால், இங்கு தமிழ் மொழியைக் கற்பதும் 
கற்பிப்பதும் வித்தியாசமாக அமைந்துள்ளது.

அமெரிக்காவில் தமிழ் கற்கவேண்டும் என்றால் குழந்தைகளுக்கு மட்டுமல்ல அவர்கள் பெற்றோருக்கும் ஆர்வமும், நேரமும் இருக்க வேண்டும். உதாரணமாக, கலி·போர்னியா தமிழ் கழகம் ஞாயிறு தோறும் காலையில் கூடுகிறது. மாணவர்கள் பலர் வெகு தூரத்தினின்று வருகின்றனர். இவர்களின் பெற்றோர்கள்தாம் இவர்களைப் பள்ளிக்கு அழைத்து வர வேண்டும். வீட்டிலும், வெளியிலும் தமிழ் பேச வாய்ப்பில்லாததால் இப்பிள்ளைகளில் பலர் தமிழில் அதிகம் பேசவோ எழுதவோ தெரியாத நிலையிலேயே பள்ளியில் சேர்கின்றனர். இவர்களின் இந்த நிலைக்கு ஏற்ப பள்ளியின் பாடதிட்டங்கள் வகுக்கப் படுகின்றன. தமது அன்றாடப் பள்ளிப்பாடங்கள் மற்றும் பாட்டு, நடனம், விளையாட்டு போன்ற இதர வகுப்புகளுக்கும் இடையில் இவர்கள் தமிழ் கற்க வருவதே பாராட்டத்தக்கதென்றால், இவர்களின் இந்த ஆர்வத்தை மேன்மேலும் பெருக்கி, இவர்கள் தம் பெற்றோர்களுக்காக மட்டுமல்லாமல் தமது ஆத்ம திருப்திக்காகவும் தமிழ் கற்க வரவேண்டும் என்னும் நிலையை ஏற்படுத்துவது ஒரு பெருமுயற்சி. இம்முயற்சியில் தான் கலி·போர்னியா தமிழ் கழகம் ஈடுபட்டிருக்கின்றது. பணலாபத்தை நோக்காகக் கொள்ளாமல், (non-profit) அதுவும் குறைந்த செலவில் மாணவர்கள் தமிழ் கற்க வேண்டும் என்னும் நோக்கமுடைய இக்கழகத்திற்கு பெற்றோர்கள் பலர் தரும் ஒத்துழைப்பு மிகவும் பாராட்டத்தக்கதாய் அமைந்துள்ளது.

தமிழ்மொழி 2000 ஆண்டுகளுக்கும் மேல் வாழ்ந்து வருகிற, இலக்கிய, இலக்கண வரலாற்றுப் புகழ் பெற்ற திராவிட மொழியாகும். கலி·போர்னியா தமிழ் கழகம் சான்·பிரான்சிஸ்கோ வளைகுடாப் பகுதியில் உள்ள மக்களுக்குத் தமிழ்க் கல்வி போதிக்கும் நோக்கத்துடன் 1999ம் ஆண்டு நிறுவப்பட்டது. கலி·போர்னியாத் தமிழ் கழகம், தமிழ் போதிப்பதுடன் மட்டுமல்லாமல், இசை, நடனம், நாடகம் போன்ற, தமிழர் பண்பாடு ஒட்டிய நிகழ்ச்சிகளுக்கும் ஆதரவு தந்து நடத்தி வருகிறது. கலி·போர்னியா தமிழ் கழகம், தமிழில் படிக்க, எழுத, மேடையில் பேச, உரையாடல் செய்ய, மற்றும் தமிழ் உரைகளைக் கேட்டுணரத் தேவையான பாடத்திட்டங்களை அமைத்துக் கொடுத்துள்ளது. இங்கு சுமார் 200 மாணவர்கள் தமிழ் கற்கிறார்கள். தமிழ் மொழி மட்டுமின்றி, தமிழர் பண்பாட்டையும் கற்றுக் கொள்கிறார்கள். இங்கு, இருபத்தி இரண்டு ஆசிரியர்களும், ஆறு அலுவலக ஊழியர்களும் வேலை செய்கிறார்கள். எல்லோரும் தன்னார்வப் பணியாளர்களாக ஊதியமின்றி வேலை செய்பவர்களே. தமிழில் வல்லமை பெற்ற ஆசிரியர்களைக் கொண்ட இப்பள்ளியில், மாணவர்களின் வயதிற்கும், கல்வித் தரத்திற்கும் ஏற்பப் பாடங்கள் பல்வேறு நிலைகளில் போதிக்கப் படுகின்றன. தமிழ் இணைய பல்கலைக் கழகத்தின் பாடத்திட்டத்தையும் தழுவி பாடங்கள் போதிக்கப் படுகின்றன. 

கலி·போர்னியா தமிழ் கழகம், ஒரு மாணவர் ஒரு வகுப்பில் நுழையும் முன் என்ன திறன் இருக்கவேண்டும், அவ்வகுப்பில் தேர்ச்சி பெற்ற பின் என்ன திறன் இருக்கவேண்டும் என்று ஒவ்வொரு வகுப்பிற்கும் பட்டியல் வகுத்துள்ளது. மாணவர்களின் திறன் வேறுபடுவதால் பொதுவாக வயதின் அடிப்படையில் ஒரு வகுப்பில் பிரிப்பதற்கல்ல - ஒவ்வொருவரையும் அவரவருக்கு மொழியில் என்ன தெரியும், எழுத படிக்கத் தெரியுமா, பேசத்தெரியுமா என்றெல்லாம் தேர்வு கண்டு அவரவர் திறனுக்கேற்ப வகுப்பில் சேர்க்கப் படுகின்றனர். 

துவக்கப்பள்ளி (kindergarten) நான்கு நிலைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது. முதலாம் கீழ் நிலை, முதலாம் மேல் நிலை, இரண்டாம் கீழ் நிலை மற்றும் இரண்டாம் மேல் நிலை ஆகிய இந்நிலைகளில் படிப்படியாக மாணவர்கள் தேர்வு கண்டதும் இவர்கள் மொழியின் அனைத்து எழுத்துக்களை எழுத, படிக்க, மற்றும் சில தமிழ்ப் பாடல்களைப் பாட, சின்ன சின்ன சொற்களை படிக்க மற்றும் எழுத அறிகின்றனர். வாரத்தில் ஒரு முறையே கூடுவதாலும், அதிலும் மொழியில் அதிகம் அடிப்படை இல்லாததாலும், இக்குழந்தைகளை 

அதிகம் உந்தாமல், மெதுவாக அவர்களுக்கு நல்ல எழுத்துக்களின் அடிப்படையை வழங்குவதே தொடக்கப்பள்ளி நோக்கமாகக் கொண்டுள்ளது. எழுத்துக்களை மட்டும் கற்பதில் பயனில்லை - சரியான உச்சரிப்பும், ஒவ்வொரு எழுத்தும் எப்படி உபயோகிக்கப் படுகின்றது என்னும் திறனும், வாழ்க்கையில் அன்றாடம் உபயோகிக்கப் படும் சொற்களும் கற்பிக்கப் படுவதால் இவர்கள் வெறும் ஏட்டுச் சுரக்காய்களாய் இல்லாமல் வீட்டிலும் வெளியுலகிலும் தமிழ் மொழியை உபயோகிப்பதற்கு வேண்டிய அடிப்படையை அளிப்பதே தமிழ் கழகத்தின் நோக்கம். இப்படி எழுத்தும் படிப்பும் மட்டுமன்றி பிள்ளைகள் கற்பவற்றை நன்கு ஆய்ந்தும், உணர்ந்தும், அனுபவித்தும் அறிவதற்கு ஏதுவாக சில கருவிகள் பயன்படுத்தப்படுகின்றன : இக்கருவிகளின் பட்டியலில் பழங்கள், காய்கறிகள் ஆகியவற்றின் மெழுகு 'மாதிரி' பொம்மைகள், எழுத்துக்களின் உச்சரிப்பிற்கு எடுத்துக்காட்டாய் அமைந்த வார்த்தைகளை உணர்த்தும் படங்களைக் கொண்ட சிறிய (flash cards) மற்று பெரிய (laminated place mats) அட்டைகள், எழுத்துக்களைத் தேடி கண்டுபிடிக்கும் சவால்களாய் அமைந்த அட்டைகள் ஆகியவை பயன்படுத்தப்படுகின்றன. 


துவக்கப்பள்ளியை முடித்த மாணவ மாணவியர் சொல், பேச்சு வளங்களைப் பெறுக்கிக்கொள்ள முதலாம் வகுப்பிற்கு ஆர்வத்துடன் வருகின்றனர். இங்கும் கீழ் மற்றும் மேல் நிலைகளில் இவர்கள் சொற்களமைக்க, எழுத, உச்சரிப்பிற்குரிய எழுத்துக்களை எழுத, வாக்கியங்கள் மற்றும் கட்டுரைகளைப் படித்தறிய கற்கின்றனர். தமிழ்நாட்டுப் முதல் வகுப்பு பாடநூலின் உதவி கொண்டு இவ்விரு நிலைகளும் மாணவர்களின் சொல் வளத்தை பெருக்குகின்றன. 

இரண்டாம் தொடக்க மற்றும் மேல் நிலைகளில் பாடங்களைத் தாமாகவேப் படிக்க, ஒருமை பன்மை, ஆண்/பெண் பால்கள் ஆகிய அடிப்படை இலக்கணங்களை உணர மற்றும் சின்ன சின்ன செய்யுள்களைப் படிக்க அறிகின்றனர். மூன்றாம் மற்றும் நான்காம் வகுப்புகளில் வாக்கியங்களைத் தாமாகவே அமைத்து கட்டுரைகளும் எழுதுமளவு தேர்வு பெறுகின்றனர். 

இவற்றை தவிற, வெறும் பேச்சும், உரையாடலும் மட்டுமே கற்க வரும் மாணவ மாணவியர்களுக்கு ஏற்ப, உரையாடல் வகுப்பும் வழங்கப்படுகின்றது. கல்விக்கு வயது வரம்பில்லை. பள்ளிச்செல்லும் சிறுவர்களல் மட்டுமல்லாமல், கல்லூரி மற்றும் அலுவல் செல்லும் பிராயத்தில் கூட தமிழ் கற்க ஆரம்பிக்கலாம் என்றுணர்த்தும் வகையில் இவர்களுக்காக ஒரு வகுப்பும் வழங்கப்படுகின்றது. இவ்விரு வகுப்புகளிலும் எளிய இலக்கியமும் (கதைகள், கட்டுரைகள், பாடல்கள்), இலக்கணமும் (பிரித்தெழுதல், ஒருமை பன்மை, காலங்கள்) கற்பிக்கப் படுகின்றன. இவற்றின் மூலம் மாணவர்கள் படிக்க, எழுத, உரையாட மற்றும் உரையாடல்களைப் புரிந்துகொள்ள இயல்கிறது. 

குழந்தைகள் தாம் படித்ததை நினைவில் வைத்திருக்கிறார்களா, தமிழ்ப் பயிற்சி செய்கிறார்களா, அடுத்த வகுப்புக்குப் போகத் தயாராக இருக்கிறார்களா, படித்த பாடங்கள் அவர்களது தமிழ் வளர உபயோகமாய் இருக்கின்றனவா என்று அறிய நம் பள்ளிக்கூடத்தில் ஒவ்வொரு தவணை முடிவிலும் அந்தந்த வகுப்புகளுக்கு ஏற்ற தேர்வுகளைநடத்துகின்றோம்.

முதல் இரு தவணைகளிலும் வினாடி வினா முறையில் தேர்வுகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு நிலையிலுள்ள ஆசிரியர் அனைவரும் சேர்ந்து தங்கள் வகுப்புக்கேற்ற தேர்வுக் கேள்விகளைத் தயாரித்து இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு முன்பு மாணவர்களிடம் கொடுப்பார்கள். தேர்வில் இந்தக் கேள்விகளில் சிலவற்றைத்தான் கேட்பார்கள். ஆனால் மாணவர்கள் வீட்டில் எல்லாக் கேள்விகளையும் படித்துத் தேர்வுக்குப் பயிற்சி செய்ய வேண்டும். வகுப்பிலுள்ள மாணவர்களைப் பல அணிகளாகப் பிரிப்பார்கள். 

முதற் தவணைத் தேர்வை ஆசிரியர்கள் நடத்த மாட்டார்கள். ஒரு பாகுபாடின்றி தேர்வு நடத்துவதற்காக, நமது பள்ளிக்கூடத்தில் ஆசிரியர் அல்லாத ஆனால் இந்த வளைகுடாத் தமிழ்ச் சமுதாயத்தின் தமிழ் வளர்ச்சியில் ஈடுபட்டுள்ள தமிழ் அன்பர்களை நாம் நடுவர்களாக அழைப்போம். ஒவ்வொரு வகுப்புக்கும் ஒன்றல்லது இரண்டு நடுவர்கள் இருப்பார்கள். அவர்கள் தமிழிலேயே கேள்விகளைக் கேட்பார்கள். 
பதிலையும் தமிழிலேயே எதிர்பாப்பார்கள். மாணவர்கள், தம்தம் அணிகளுக்குள் கலந்து பேசிப் பதிலளிக்கலாம். மாணவர்கள் ஆங்கிலத்தில் கேள்விக்கு விளக்கம் கேட்டாலோ, பதிலளித்தாலோ அவர்களுடைய அணிக்குப் புள்ளிகள் குறையும்.
2002ம் ஆண்டு மார்கழி மாதத்தில் நடந்த தேர்வில் இருந்த சில கேள்விகள் கீழே தரப்பட்டுள்ளன:
அரிவரி: உயிர், மெய், உயிர்மெய், குறில், நெடில் எழுத்துக்கள், மாதங்கள், வார நாட்கள், மிருகங்கள், நிறங்கள் 

உதாரணக்கேள்விகள்: 

காட்டில் வாழும் மூன்று மிருகங்கள் என்ன?

கசப்பாய் இருக்கும் ஒரு காய் என்ன?

வீட்டில் வாழும் ஒரு விலங்கு என்ன?

மூன்றாம் நாலாம் வகுப்புகள்: இலக்கணம்: ஒருமை, பன்மை, திணை, பால், முக்காலங்கள், தமிழகத்தைப் பற்றி பொது அறிவு
உரையாடல் வகுப்பு: படித்த சொற்களுக்குப் பொருள் அறிந்து வசனம் அமைத்தல்:
வசனம்: என்னுடைய அம்மம்மா என் அப்பாவின் மாமியார்.