Aboutus > பள்ளிப் பாடத் திட்டமும் வகுப்புக்களும்

பள்ளிப் பாடத் திட்டமும் வகுப்புக்களும்

வித்யா நாராயணன் 
லதா சந்திரமோகன்

அமெரிக்க பள்ளி நிலைகளைப் பின்பற்றும் முறையில், இவ்வாண்டு முதல் கலிபோர்னியா தமிழ் கழகத்தின் வகுப்புகள் ஐந்து நிலைகளாகப் பிரிக்கப் பட்டுள்ளன.

முதல் நிலை - பள்ளி அறிமுக நிலை (Preschool). இதில் உள்ள ஒரே வகுப்பில், இனிய பாடல்களைக் கேட்டும், பாடியும் மகிழ்கின்றனர் மழலைச் செல்வங்கள். இவ்வகுப்பின் பாடத் திட்டம், மூன்றிலிருந்து நான்கு வயதிற்குட்பட்ட இக்குழந்தைகளை ஊக்குவிக்கும் வகையில், கதைகள், பாடல்கள் மற்றும் விளையாட்டின் மூலம் தமிழ் பயிற்றுவிக்கும் பயிற்சிகள் ஆகியவற்றைக் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது.

இரண்டவதாக உள்ள நிலை, இள நிலை (Elementary School Grade Level). இதில் 1,2,3,4 என்று நான்கு வகுப்புகள் உள்ளன. 26 எழுத்துக்களே கொண்ட ஆங்கில மொழியையே முதலில் பயின்று வளரும் குழந்தைகளின் மீது தமிழ் எழுத்துக்கள் அனைத்தையும் ஒட்டு மொத்தமாக திணிக்காமல், மெதுவாக படிப்படியாக உயிர், மெய், உயிர் மெய் என்று எழுத்துக்களை அறிமுகப் படுத்தும் வகையில் இவ்வகுப்புகள் அமைந்திருக்கின்றன. எழுத்துக்கள், சிறிய, எளிய சொற்கள், மற்றும் சொற்றொடர்கள், பாடல்கள், கதைகள் இவற்றின் மூலம் படிப்படியே இந்நிலையின் மாணவர்கள் நான்காம் வகுப்பை அடைவதற்குள் தமிழ் எழுத்துக்கள் அனைத்திலும் தேர்ச்சியடைவதோடு, எழுத்துக்கூட்டி படிக்கவும், எளிய வார்த்தைகளைக் காதால் கேட்டு எழுதும் திறனும் அடைகின்றனர்.

மூன்றாம் நிலை, நடு நிலை (Middle School Grade Level). இதில் நுழைவு பெறும் சிறுவர்கள் எழுத்துக்கள் அனைத்தையும் அறிந்திருக்க வேண்டும். சிறிய சொற்கள், சொற்றொடர்களை அறிந்த இவர்கள் இந்நிலையில் வாக்கியங்கள் அமைக்கவும், முழுப் பாடங்களை படித்தறியவும் செய்கின்றனர். இந்நிலையிலும் உள்ள 4 வகுப்புகள், இத்திறன்களைப் படிப்படியே வழங்குகின்றன.

நான்காம் நிலை, உயர் நிலை (High School Grade Level). அருஞ்சொற்கள், இலக்கணம், சிறிய கட்டுரை மற்றும் கடிதம் எழுதுதல், ஆகியவற்றை கற்பித்து தமிழில் மேலும் தேர்ச்சியடையச் செய்வதே இந்நிலையின் குறிக்கோள்.

தமிழ் நாட்டுப் பாட நூல்களை ஆதாரமாக வைத்து வகுக்கப்பட்ட இந்நிலைகள்¢ன் தற்போதைய பாடத் திட்டத்தில் அமெரிக்காவில் வளரும் குழந்தைகளின் சூழலுக்கேற்ப, எளிய உரைநடைகள் மற்றும் பயிற்சிகளைச் சேர்த்து சில மாற்றங்களைச் செய்யும் பணியில் ஈடுபட்டுள்ளது கலிபோர்னியா தமிழ் கழகம்.

ஐந்தாவது நிலை, அமெரிக்க உயர்நிலைப் பள்ளிகளின் தமிழ் பாடத்தை விருப்பப் பாடமாக எடுத்துக் க்ரெடிட் (credit) பெறுவதற்கு ஏதுவாக அமைந்துள்ளது (Credit Program). தற்போது பிரீமாண்ட்டு உயர் நிலைப் பள்ளி மாவட்டத்தில் (Fremont Union School District) உள்ள உயர் நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்களே இந்நிலையின் மூலம் பயனடைகின்றனர். இதுபோல் மற்ற பள்ளிகளையும் கலிபோர்னியா தமிழ் கழகம் அணுக உத்தேசித்துள்ளது.

இவ்வைந்து நிலைகளைத் தவிர, வேறிரண்டு வகுப்புகளும் உள்ளன - அவை பேச்சுத்தமிழ் வகுப்பும் (Conversation class), பெரியோர்களின் வகுப்பும் (Adult class) - பேச்சுத் தமிழ் வகுப்பில் பயிலும் மாணவ மாணவியர் தமிழில் பேச, பேச்சைப் புரிந்து கொள்ளக் கற்கின்றனர். இள வயதில் தமிழ் பயில இயலாமல் போனோர், பின்னர் தமிழைக் கற்கும் வகையில் அமைந்துள்ளது பெரியோர் வகுப்பு - இதில் பேச்சும் எழுத்தும் கற்றுத்தரப் படுகின்றன.

தமிழை உலகெங்கும் பரப்பச் சொன்னார் மகாகவி பாரதி. இன்று தமிழர்கள் உலகெங்கிலும் வசித்துவருகின்றனர். கலிபோர்னியா தமிழ் கழகத்தில் பயிலும் நூற்றுக்கணக்கான சிறுவர் சிறுமியரைப் பார்க்கையில் 'இங்கு வாழும் இத்தமிழர்களின் இளைய தலைமுறைகள் தமிழைப் பயின்று தமிழோசை ஆங்காங்கே கேட்கும் வகை செய்வரெ'னும் நம்பிக்கைப் பிறக்கின்றது.