Aboutus >பள்ளியில் தேர்வுமுறை

பள்ளியில் தேர்வுமுறை

நளாயினி குணநாயகம்
சுமதி விஜயகுமார் 

நமது பள்ளிக்கூடத்திலே பல்வேறு நிலையிலுள்ள குழந்தைகளுக்குத் தமிழ் கற்பிக்கின்றோம். பள்ளி அறிமுக நிலை(Pre-school), இளநிலை (Elementary), நடுநிலை (Middle), உயர்நிலை (High) என வகுப்புகள் பிரிக்கப்பட்டுள்ளன. குழந்தைகளின் வயதைப் பார்க்காமல், அவர்களது தமிழ் ஆற்றலைப் பார்த்தே, அவர்களுக்குத் தகுந்த வகுப்பில், ஆசிரியர்கள் அவர்களை அமர்த்துகின்றனர். ஒவ்வொரு வகுப்பிலும் கற்பிக்கப்படும் பாடங்கள் அடுத்த வகுப்பில் வரும் பாடங்களுக்கு வித்தாக அமைகின்றன. இதனால், குழந்தைகள் தத்தம் வகுப்பில் படிக்கும் பாடங்களை நன்கு அறிதல் மிகவும் முக்கியம். 

பள்ளி அறிமுக நிலை மழலைகள் வகுப்பு, அவர்களுக்குத் தேர்வுகள் இல்லை. மற்ற நிலைகளில் குழந்தைகள் தாம் படித்ததை நினைவில் வைத்திருக்கிறார்களா, தமிழ்ப் பயிற்சி செய்கிறார்களா, அடுத்த வகுப்புக்குப் போகத் தயாராக இருக்கிறார்களா, படித்த பாடங்கள் அவர்களது தமிழ் வளர உபயோகமாய் இருக்கின்றனவா என்று அறிய ஒவ்வொரு காலாண்டு (trimester) முடிவிலும் அந்தந்த வகுப்புகளுக்கு ஏற்றபடி வரூடத்திற்கு மூன்று முறை தேர்வுகள் நடத்தப் படுகின்றன.

முதல் இரு காலாண்டுகளிலும் வினாடி வினா முறையில் தேர்வுகள் நடைபெறுகின்றன. ஒவ்வொரு நிலையிலுள்ள ஆசிரியர் அனைவரும் சேர்ந்து தயாரித்து ஆரம்ப நிலைக்குக் கேள்வி வங்கியும், நடுநிலை மற்றும் உயர்நிலைப் பள்ளி மாணவர்களுக்குக் கேள்விகளுக்கான தலைப்புக்களையும் தேர்வுக்கு ஓரிரு வாரங்களுக்கு முன்பு அளிக்கின்றனர். தேர்வில் கேள்விகள் கேள்வி வங்கியிலிருந்தோ அல்லது கொடுக்கப்பட்டுள்ள தலைப்புக்களின் அடிப்படையிலோ இருக்கும். மாணவர்கள் வீட்டில் எல்லாக் கேள்விகளையும் படித்துத் தேர்வுக்குப் பயிற்சி செய்ய வேண்டும். 

முதல் காலாண்டுத் தேர்வு குழு வினாடி வினா. வகுப்பிலுள்ள மாணவர்களைப் பல அணிகளாகப் பிரித்து, பள்ளியில் ஆசிரியரோ பெற்றோரோ அல்லாத ஆனால் இந்த வளைகுடாத் தமிழ்ச் சமுதாயத்தின் தமிழ் வளர்ச்சியில் ஈடுபட்டுள்ளவர்களை நடுவர்களாகக் கொண்டு இந்த வினாடி வினாக்கள் நடத்தப் படுகின்றன. ஒவ்வொரு வகுப்புக்கும் ஒரு அல்லது இரண்டு நடுவர்கள் இருப்பார்கள். அவர்கள் கேள்வி வங்கியிலிருந்தோ அல்லது தலைப்புக்களின் அடிப்படையிலோ கேள்விகளைத் தமிழிலே கேட்பார்கள். பதிலையும் தமிழிலேயே எதிர்பார்ப்பார்கள். மாணவர்கள், தத்தம் அணிகளுக்குள் கலந்து பேசிப் பதிலளிக்கலாம். மாணவர்கள் ஆங்கிலத்தில் கேள்விக்கு விளக்கம் கேட்டாலோ, பதிலளித்தாலோ அவர்களுடைய அணிக்குப் புள்ளிகள் குறையும்.

2002 ஆம் ஆண்டு மார்கழி மாதத்தில் நடந்த தேர்வில் இருந்த சில கேள்விகள் கீழே தரப்பட்டுள்ளன:

இளநிலை: உயிர், மெய், உயிர்மெய், குறில், நெடில் எழுத்துக்கள், மாதங்கள், வார நாட்கள், மிருகங்கள், நிறங்கள் 

உதாரணக்கேள்விகள்:

மிக்கி ஒரு எலியா? பூனையா?
கசப்பாய் இருக்கும் ஒரு காய் என்ன?
வீட்டில் வாழும் ஒரு விலங்கு என்ன? 

மூன்றாம் நான்காம் நிலைகளில் இலக்கணம்: ஒருமை, பன்மை, திணை, பால், முக்காலங்கள், தமிழகத்தைப் பற்றி பொது அறிவு.

உரையாடல் வகுப்பு: படித்த சொற்களுக்குப் பொருள் அறிந்து வாக்கியம் அமைத்தல்:

உதாரணம்: கேள்வி: மாமியார் என்னும் சொல்லை ஒரு வாக்கியத்தில் அமை.
பதில்: என்னுடைய அம்மாவின் அம்மா என் அப்பாவின் மாமியார

இரண்டாம் காலாண்டில் வினாடி வினாக்கள், எழுத்து மற்றும் ஒப்பிக்கும் தேர்வுகள் ஆசிரியர்களால் நடத்தப்படுகின்றன. இம்முறை வினாடி வினாக்களில் மாணவர்கள் குழுவாக இல்லாமல் தனித்தனியாகப் பதில் அளிக்க வேண்டும். 

மூன்றாம் காலாண்டில் நடக்கும் தேர்வு வருட இறுதித் தேர்வு. இறுதித்தேர்வில் நன்றாகச் செய்து வெற்றி பெற்றால்தான், மாணவர்கள் மேல்வகுப்புக்குச் செல்ல முடியும். இத்தேர்வுக்கும், ஆசிரியர்கள் கலந்து பேசி வகுப்பில் மாணவர்கள் கற்றிருக்க வேண்டிய திறன்களுக்கேற்ப மாதிரிக் கேள்விகள், அல்லது தலைப்புக்கள் தயாரித்துக் கொடுப்பார்கள். அவற்றை அடிப்படையாகக் கொண்டு அமையும் எழுத்துத் தேர்வில் மாணவர்கள் கேள்விகளுக்குத் தேர்வுத்தாள்களில் பதில் அளிக்க வேண்டும். நான்காம் நிலைக்கு மேல், தயாரித்த மாதிரிக் கேள்விகளுக்குப் பதிலாக மாணவர்கள் படித்த பாடங்களில் இருந்து கேள்விகள் கொடுக்கப்படும். வருட இறுதித் தேர்வில் எழுத்துத் தேர்வுடன் ஒப்பிக்கும் தேர்வும் உண்டு. 

தமிழ் அறிவை வளர்ப்பது நம் பள்ளிக்கூடத்தின் ஒரு குறிக்கோள். கலி·போர்னியா மாநிலத்து நடு நிலை, உயர் நிலைப் பள்ளிக்கூடத்தில் மாணவர் விருப்பப் பாடமாக எடுக்கக் கூடிய ஒரு மொழியாக இந்த மாநிலத்தால் அங்கீகரிக்கப்படும் நிலைக்குத் தமிழையும் கொண்டு வருவது இன்னொரு குறிக்கோள். இவை இரண்டிற்கும் இந்தத் தேர்வுகள் பயன் அளிக்கும் என நம்புகிறோம்.