About us > தலைவர் முன்னுரை

வெற்றிச்செல்வி ராஜமாணிக்கம்,

வணக்கம்.

கலிபோர்னியாத் தமிழ்க் கழகத்தின் ஆறாம் ஆண்டு மலரில் உங்களைச் சந்திப்பதில் பெருமையும் மகிழ்ச்சியும் அடைகின்றேன்.

ஆறு ஆண்டுகளுக்கு முன் வெறும் 13 மாணவ மாணவியருடன் தொடங்கப்பட்ட நமது பள்ளி, இந்த ஆண்டு 200 மாணவர்களைக் கொண்டுள்ளது. ஒரு வகுப்பில் பத்து மாணவர்களுக்கு மேல் இருந்தால் சிறந்த முறையில் கல்வி கற்பிக்க இயலாது என்ற காரணத்தால் பிப்ரவரியுடன் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது.

கடந்த ஆறு ஆண்டுகளில் படிப்படியாகப் பல வளர்ச்சிகளைக் கண்டுள்ளது நமது கலிபோர்னியாத் தமிழ்க் கழகம். இந்த ஆண்டு மழலைக் கல்வி (Pre-school) தொடங்கப்பட்டு சிறுவர் மனநிலைக் கல்வியில் தேர்ந்த திருமதி. ஆர்த்தி நிகாம் அவர்களின் உதவியுடன் திருமதி.ஆர்த்தி வினோத், நிருபா அருள் ஆகியோரை ஆசிரியராகக் கொண்டு சிறந்த முறையில் இந்த வகுப்பு செயல்பட்டு வருகிறது.

மாணவர்கள் தமிழ் எழுதப் படிக்கத் தெரிந்தால் மட்டும் போதாது, வேறு திறமைகளையும் வளர்த்துக் கொள்ளவேண்டும் என்ற எண்ணத்துடன், பள்ளி நேரம் முடிந்தபின்பு பேச்சு, விவாதம், கட்டுரை எழுதுதல், கணினியில் தமிழ், பாட்டு, நூலகம் போன்ற வகுப்பு சாராக் கல்வியும் (clubs) இந்த ஆண்டு தொடங்கப்பட்டுள்ளது. திருமதி. சுமதி பத்மநாபன் தலைமையில், கந்தசாமி பழனிசாமி, ரமேஷ் ஐயர், லோகநாதன் வெங்கடாசலம், கோபால், நளாயினி குணநாயகம் ஆகியோர்களின் முயற்சியில் இவைகள் நன்கு செயல்பட்டு வருகின்றன.

இவை தவிர, நமது பள்ளி மாணவர்கள் தமிழ் இணையப் பல்கலைக் கழகத்தின் சான்றிதழ் பெற உதவும் பயிற்சி வகுப்புக்களும் பள்ளி நேரத்துக்குப் பின் திருமதி. லதா சந்திரமோகன், கந்தசாமி பழனிசாமி ஆகியோர்களால் நடத்தப்பட்டு வருகின்றன.

வரும் ஆண்டுகளில் இன்னும் சிறந்த முறையில் பள்ளியின் பாடத்திட்டம் அமையவேண்டும் என்ற குறிக்கோளுடன் ஒவ்வொரு வகுப்பிற்கும் பாடப் புத்தகம், பயிற்சிப் புத்தகம், கையெழுத்துப் புத்தகம் இவைகள் உருவாக்கும் முயற்சியிலும் கழகம் ஈடுபட்டுள்ளது. பாடத் திட்டக் குழு ஒன்று அமைக்கப்பட்டு, அதில் உள்ள திருமதி. வித்யா நாராயணன், கந்தசாமி பழனிசாமி, லதா சந்திரமோகன், கவிதா செந்தில் ஆகியோர் பாடத்திட்டத்தைச் செம்மைப் படுத்தி வருகின்றனர். இந்தப் புத்தக முயற்சிக்கு வெற்றியடையப் பண உதவியும் ஊக்கமும் அளித்து வரும் அனைத்துப் பெற்றோர்களுக்கும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

எல்லாவற்றிற்கும் மேலாக, Fremont Union High School District, அதன் உயர்நிலைப் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் நமது பள்ளியில் ஒரு செமஸ்டர் தமிழை விருப்பப் பாடமாக எடுத்துத் தேர்ச்சி பெற்றால், அவர்களுக்கு ஐந்து மதிப்பீட்டுப் புள்ளிகள் (credits) வழங்க ஒப்புக் கொண்டுள்ளது. இது நமது கலிபோர்னியாத் தமிழ்க் கழகத்துக்குக் கிடைத்த ஒரு மிகப் பெரிய வெற்றி, அங்கீகாரமாகும். கதிர் அண்ணாமலை, மகேஷ் ஜெயக்குமார் என்ற இரு மாணவர்கள் இந்த ஆண்டு அந்தத் தமிழ் வகுப்பில் தேர்ச்சியடைந்து ஐந்து மதிப்பீட்டுப் புள்ளிகள் பெற்ற முதல் மாணவர்கள் என்ற பெருமையைப் பெருகிறார்கள். வாரத்திற்கு ஐந்து மணி நேரம் இந்த வகுப்புக்களை மிகச் சிறந்த முறையில் நடத்தி இந்த மாணவர்களுக்கு வெற்றியையும் கலிபோர்னியாத் தமிழ்க் கழகத்துக்குப் பெருமையையும் சேர்க்கும் ஆசிரியர்கள் திரு. சிவக்குமார், திருமதி. நளாயினி குணநாயகம், திருமதி. ஆர்த்தி வினோத், மற்றும் திருமதி. கவிதா செந்தில ஆகியோருக்கு நன்றி. இநத வகுப்புக்க்காக முதலில் புத்தகம் எழுதிக் கொடுத்து ஆதரித்த திருமதி. கௌசல்யா ஹார்ட் அவர்களுக்கு மனமார்ந்த நன்றி.

கலிபோர்னியாத் தமிழ்க் கழகத்தின் ஒவ்வொரு முயற்சியிலும் அயராது பாடுபடும் ஆசிரியர்கள், நிர்வாகிகள் அனைவருக்கும் நன்றி. அவர்களின் கடின உழைப்புக்கும் ஆர்வத்துக்கும் அளவுகோல் இல்லை. அவர்களின் உழைப்பும் ஆர்வமும் இன்றி நமது பள்ளி சில ஆண்டுகளிலேயே இவ்வளவு வளர்ச்சி அடைந்திருக்க முடியாது.

அதே போலத் தமிழ்க் கழகத்தின் ஒவ்வொரு முயற்சிக்கும் ஒத்துழைப்பும் ஆதரவும் வழங்கும் பெற்றோர்களுக்கும், மாணவ, மாணவியருக்கும் எனது இதயங்கனிந்த நன்றி.