Aboutus > மாணவர் கவனம் கவரும் கல்வி யுக்திகள்

மாணவர் கவனம் கவரும் கல்வி யுக்திகள்

கந்தசாமி பழனிசாமி

கலிபோர்னியாத் தமிழ்க் கழகத்து மாணவர்கள் மழலையர் முதல் உயர்நிலைப் பள்ளி மாணவர்கள் வரை பல்வேறு வயதினர். தங்கள் பள்ளிகளில் அமெரிக்கக் கல்வி முறைப்படி, போதனை உபகரணங்கள், சிந்திக்கத் தூண்டும் செயல் முறைகள் இவைகளுடன் படிப்பவர்கள். அவரவர் வயதுக்கேற்ப அறிவு பூர்வமாகச் சிந்திக்கும் புத்திசாலிகள், சுட்டிகள்.

இந்த மாணவர்கள் அனைவருமே சுய ஆர்வத்துடன் தமிழ்ப் பள்ளிக்கு வருகின்றனர் என்று சொல்ல முடியாது. ‘நான் ஏன் தமிழ் கற்க வேண்டும், பேச வேண்டும்?’ ‘சனி, ஞாயிறன்று கூட நான் தமிழ்ப் பயிற்சிகளைச் செய்ய வேண்டுமா?‘ என்று நினைக்கும் மாணவர்களும் உண்டு. அவர்களுக்குத தமிழ் கற்கும் ஆர்வம் வர வேண்டும், வளர வேண்டும் என்றால் சிறப்புக் கவனத்துடன் தமிழ்க் கற்பிக்கும்போது புதுப்புது யுக்திகளைக் கையாள்வது அவசியம்.

பாடல்கள், கதைகள் குழந்தகளுக்குப் பிடித்தவை. பாடல்கள், கதைகள் சொல்லித் தரும்போது, அவைகளில் உள்ள பறவையாக, விலங்காக, பாத்திரமாக வகுப்பில் உள்ள சிறுவர்களை அவரவர் விருப்பத்தை கேட்டு ஆக்குதல் ஒரு பயனுள்ள யுக்தியாகப் படுகிறது. உதாரணமாக, 

‘டக் டக் கடிகாரம்’ பாட்டின் போது, ஒருவர் கடிகாரம், ஒருவர் பூனை, சிலரை எலிகளாக இருக்கச் செய்து கை, கால் அசைவுகளுடன் விளையாட்டாகப் பாடினால், பாடல்கள் மனதில் நிற்பதுடன், வகுப்பும் வேகமாகச் செல்கிறது. பாடல்களைத் துவங்கும் போது, ஏதாவது ஒரு எண்ணிலிருந்து countdown செய்து, வேகமாக, மெதுவாக, சத்தமாக, சன்னமாக மாற்றிப் பாடச் செய்வது அவர்கள் கவனம் சிதறாமல் திரும்பத் திரும்பப் பாடவைக்க உதவுகிறது.

பாடல்கள் அவர்களுக்குத் தெரிந்த ராகத்தில், வரிகள் அவர்களுக்குப் பிடித்த பொருள்களாக இருந்தால், அவைகளை மிக எளிதில் கற்றுக் கொள்கின்றனர். ‘காந்தித் தாத்தா நம் தாத்தா‘ பாடல் Mary Had a Little Lamb ராகத்தில் இருந்தால், பாடும் போது ஒரு புது வேகமே வந்துவ்¢டுகிறது. வீட்டு விலங்குகளைப் பற்றிச் சொல்லித்தரும் போது, Old Macdonald Had a Farm ராகத்தில் அமைந்த “மாறன் தாத்தா பண்ணை பார்’ (கதிரவன் எழில்மன்னனின் குழந்தைப் பாடல்களிலிருந்து, மாணவர்கள் விலங்குகளின் பெயர்கள், ஒலிகள் இவற்றைச் சுலபமாகக் கற்றுக் கொள்கின்றனர்.

புது வார்த்தைகள் சொல்லித் தரும் போது. அவர்களுக்குப் பரிச்சயமான விஷயங்களைப் பற்றிப் பேச வேண்டும். எலி என்றால் மிக்கி, மின்னி, ஆந்தை, வவ்வால், பூசணி என்றால் Halloween, முயல் என்றால் ஈஸ்டர், உருளைக் கிழங்கு என்றால் French Fries, காய்கறிகள் என்றால் pizza toppings, என்று அவர்கள் மனதில் நிற்கும் விஷயங்களைப் பேசினால் மாணவர்கள் தனி ஈடுபாட்டுடன் கற்றுக் கொள்கின்றனர். ‘கை வீசம்மா கை வீசு’ பாடல், ‘கடைக்குப் போகலாம் கைவீசு Pizza வாங்கலாம் கைவீசு’ என்று அவர்களுக்குப் பிடித்த பொருள்களைக் கொண்டுள்ள பாடலாக மாறும் போது அந்தப் பாடலைச் சொல்லித் தருவதும் சுலபமாகிறது. 

தமிழ் வார்த்தை விளையாட்டுக்கள், புதிர்கள், விடுகதைகள், குறுக்கெழுத்துக்கள் மாணவர்கள் சிந்தனையைத் தூண்டுகின்றன. ‘வெட்டினால் வலிக்காத உடல் பாகம் எது?’ என்று கேட்டால், அதை ஒரு சவாலாக எடுத்துக்கொண்டு சிந்திக்கின்றனர். அவர்களையே புதிரோ, விளையாட்டோ அமைக்கச் செய்து, அதைக் கேட்கச் செய்வதும் அவர்கள் ஆர்வத்தை அதிகரிக்கச் செய்கிறது. (இந்த ஆண்டு மலரில் நமது மாணவர்களின் புதிர்கள், வார்த்தை விளையாட்டுக்கள், குறுக்கெழுத்துக்கள் பல உள்ளன).

நமது ஆசிரியர்கள் அனுபவத்தில் அறிந்த உத்திகள் இன்னும் எத்தனையோ உள்ளன. பாடத்திட்டத்தில் ஒரு அங்கமாக அவைகளை அமைத்துப் புதிய புத்தகங்களை ஆக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது கலிபோர்னியாத் தமிழ்க் கழகம்.