வெற்றிச்செல்வி ராஜமாணிக்கம்,

அனைவருக்கும் வணக்கம்,

கடந்த 27 ஆண்டுகளாக, உங்கள் ஆதரவும் உற்சாகமும் நம் பள்ளியின் வளர்ச்சிக்குப் பெரிய தூணாக அமைந்துள்ளன. இந்த நீண்ட பயணத்தில், தன்னார்வலர்களின் கடின உழைப்பும் , பெற்றோர்களின் உறுதுணையும், மாணவர்களின் தமிழ் கற்கும் ஆர்வமும் பல்வேறு உயர்வுகளுக்குக் காரணமாக இருக்கின்றன. இன்று இந்த வெற்றிப் பயணத்தின் சில முக்கியமான கட்டங்களை உங்களுடன் பகிர விரும்புகிறோம்.

நம் பள்ளி தமிழ்மொழி மற்றும் பண்பாட்டை முழுமையாக கற்றுக்கொடுக்கவும், மாணவர்களுக்கு அவர்களது அடையாளத்தை வலுப்படுத்தவும் அர்ப்பணிப்புடன் செயல்படுகிறது. விவரமான பாடத்திட்டம், தமிழ்சார் நிகழ்ச்சிகள், கலை நிகழ்ச்சிகளில் மாணவர்கள் தங்கள் திறனை வெளிப்படுத்தும் வாய்ப்புகள் என பலவகை முயற்சிகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றன.

சில முக்கிய முன்னேற்றங்கள்:

மாணவர் வளர்ச்சி:

கடந்த ஒரு ஆண்டில் மட்டும் 18,000-திற்கும் அதிகமான மாணவர்கள் நம் பள்ளியில் தமிழ்க் கற்றுள்ளனர். அவர்களில் பலர் மாநில மற்றும் தேசிய அளவில் நடைபெற்றத் தமிழ்ப் போட்டிகளில் பங்கேற்றுப் பல பரிசுகளைப் பெற்றுள்ளனர்.

நிகழ்வுகள் மற்றும் விழாக்கள்:

ஆண்டு விழா, கலாச்சார நிகழ்ச்சி, போட்டிகள் என எங்கள் மாணவர்கள் தங்களது திறமைகளை வெளிப்படுத்தும் வகையில் வாய்ப்புகளை வழங்கியுள்ளோம். தமிழ் மரபுகளைப் போற்றும் வகையில் பல பண்பாட்டு அனுபவங்களை வழங்கியுள்ளோம். இதன் மூலம் மாணவர்கள் தங்கள் பாரம்பரியத்தை மேலும் அறிந்து கொள்கிறார்கள்.

பாடத்திட்ட மேம்பாடு:

உலகத் தமிழ்க் கல்விக்கழகம், மழலை வகுப்பிலிருந்து எட்டாம் வகுப்பு வரை, பாடப்புத்தகங்களை உருவாக்கியுள்ளது. இப்புத்தகங்கள் கற்றலை மையமாகக் கொண்டு, தகவல்களை வழங்குவதில் சீரான முறையை பின்பற்றுகின்றன. மொழித் திறன்கள், அதாவது கேட்டல், பேசுதல், படித்தல் மற்றும் எழுதுதல், முறையாக ஒருங்கிணைக்கப்பட்டு, வயதுக்கு ஏற்ப, ஈர்க்கக்கூடிய மற்றும் பொருத்தமான உள்ளடக்கங்களைக் கொண்டுள்ளது. பாடத்திட்டங்கள் தொடர்ச்சியாக புதுப்பிக்கப்படுவதால், புதிய தேவைகள் மற்றும் கல்வி நிலைகளை எளிதாக பூர்த்தி செய்யப்படுகின்றது.

தொழில்நுட்பம் :

மாணவர்கள் தங்கள் பாடப் புத்தகங்களைச் சுலபமாகக் கற்றுக்கொள்ள "அறிவொலி" (Smart Pen)என்கிற பேனாவை உருவாக்கியுள்ளோம்.. இந்த பேனா பாடங்களை மாணவர்கள் தாங்களே விரும்பும் நேரத்தில் படித்து ஆழமாக உணர உதவுகிறது. Online learning management system, Arigar App என புதிய செயலிகள் உருவாக்கப்பட்டு மாணவர்களின் கற்றல் மற்றும் வீட்டுப் பாடத்தைச் செய்யும் வகையில் எளிமை படுத்தப்பட்டுள்ளது.

கல்வித்திட்டச் செயல்முறை பகுப்பாய்வு:

நாம் புதிதாகத் தொடங்கிய 'நிரல் பகுப்பாய்வு குழு' (Program Analysis Team), பெற்றோர்கள், ஆசிரியர்கள், தன்னார்வலர்களின் கருத்துகளை நன்கு ஆராய்ந்து நம் பள்ளியின் கல்வி முறையில் தேவையான மாற்றங்களை மேற்கொள்வதில் முக்கியப் பங்காற்றியுள்ளது. இது வெறும் தகவல் சேகரிப்பதற்கான முயற்சி அல்ல. இதைப் பயன்படுத்தி உண்மையான மேம்பாடுகளைச் செய்யும் முயற்சியாகும். இதன் மூலம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் முடிவுகளை எங்கள் பள்ளியின் இணையதளத்தில் விரைவில் வெளியிட உள்ளோம்.

புலம் பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு:

பாடத்திட்ட மேம்பாடு, ஆசிரியர்ப் பயிற்சி, புதிய கற்றல் கருவிகள், தொழில்நுட்ப வளர்ச்சி ஆகியவற்றை நம்மைப் போன்று புலம் பெயர்ந்து வசிக்கும் மற்ற தமிழர்களுடன் பகிர்ந்து கொள்ளும் வகையில், 2012ஆம் ஆண்டு புலம்பெயர்ந்தோர் தமிழ்க் கல்வி மாநாடு தொடங்கப்பட்டது. இதை தொடர்ந்து, நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை இம் மாநாடு அமெரிக்காவில் நடைபெற்று வருகிறது. வரும் 2026ஆம் ஆண்டு, நான்காவது மாநாடு தமிழ்நாட்டில், சென்னையில் ஜூலை 2 முதல் ஜூலை 5 (07/02/2026- 07/05/2026) ஆம் தேதி வரை சென்னையிலுள்ள அண்ணா நூலகத்தில் நடைபெற உள்ளது.

இந்தியாவில் நடைபெற உள்ள இம்மாநாட்டில் நம் பள்ளி மாணவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டு பயனடையவும், இம்மாநாட்டை வெற்றியடையச் செய்யுமாறும் கேட்டுக் கொள்கிறோம். கூடுதல் விவரங்களுக்கு www.itadtec.org தளத்தைப பார்க்கலாம்.

இந்த 27 ஆண்டுகளில் உங்கள் ஆதரவும், உறுதுணையும் நம் பள்ளி முன்னேற்றத்திற்கு வலு சேர்த்து வந்துள்ளது. இப்போதும், எதிர்காலத்திலும், உங்கள் தொடர்ந்த ஆதரவையும் தருவீர்கள் , உங்கள் பிள்ளைகளைத் தமிழ் கற்க ஊக்குவிப்பீர்கள் என்றும் நம்புகிறோம்.

நன்றி! வணக்கம்.